Archive for பிப்ரவரி 2, 2008

காபி உஷார்

தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

பிப்ரவரி 2, 2008 at 3:13 முப பின்னூட்டமொன்றை இடுக

நிர்வாண பயணம்

நிர்வாண விமானப் பயணத்திற்கு கிழக்கு ஜெர்மனியிலுள்ள விமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து பால்டிக் கடற்கரை வரை செல்லும் இந்தப் பயணத்தில் பயணிகள் அனைவரும் நிர்வாணமாகப் பயணிக்கலாம் என உற்சாக அழைப்பு விடுத்திருக்கிறது அந்த நிர்வாணம் மன்னிக்கவும் நிறுவனம்.

விமானத்தில் ஏறும் வரை உடை அணிந்து வரவேண்டும் என்றும், விமானத்திற்குள் வந்தபின் உடை களைந்து நிர்வாணமாக திரியலாம் எனவும் , செல்லுமிடம் சென்று சேர்ந்தபின் மீண்டும் உடை அணிந்து கொண்டு விமானத்திலிருந்து இறங்க வேண்டும் எனவும் “ஒழுங்கு” முறை வரையறுக்கப்பட்டுள்ளது.

ஐம்பத்து ஐந்து பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்துக்கான முன்பதிவு துவங்கி விட்டதாம். ஜூலையில் பயணமாம் !

நேச்சுரிசம் எனப்படும் நிர்வாண விரும்பிகள் கிழக்கு ஜெர்மனியில் அதிகம். நாசிகளால் தடை செய்யப்பட்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் மீண்டும் அந்த எண்ணம் கிளர்ந்து எழுந்திருக்கிறது.

நிர்வாணமாய் அமர்ந்து உணவு உண்ணும் சிறப்பு உணவகங்கள் கூட கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இப்போது நிர்வாண விமானப் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யோசனையைச் சொன்னதே ஒரு வாடிக்கையாளர் தான் என்கின்றனர் நிறுவனத்தினர்.

ஆனால் ஒன்று, பயணிகள் மட்டும் தான் நிர்வாணமாக, விமானப் பணிப்பெண்களும், பணியாளர்களும், பைலட்டும் – உடையுடன் !!! ( சிவ பூஜையில் கரடி ?)

பிப்ரவரி 2, 2008 at 3:09 முப பின்னூட்டமொன்றை இடுக


நாட்காட்டி

பிப்ரவரி 2008
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
2526272829  

Posts by Month

Posts by Category