Buddha has finally smiled

ஜூலை 12, 2008 at 6:52 முப 9 பின்னூட்டங்கள்

நாள்: 1974ம் ஆண்டு 18ம் தேதி காலை 7 மணி…

இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி.

எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், ‘அந்த இடத்திலிருந்து’ வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர்.

இடம்: டெல்லி. காலை 8 மணி.

பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் ‘தகவல்’ வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்..

மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, ‘Buddha has finally smiled’.

மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, ‘இந்தியா அணு குண்டு சோதனை’ என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது.

இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும்.

சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு.

ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின.

வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை.

இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர்.

சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா.

அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் ‘ஜகா’ வாங்கின.

அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான்.

அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை ‘sustain’ செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம்.

நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும்.

நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான்.

ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன.

1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின.

சோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான ‘ஹெவி வாட்டரை’ வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது.

அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது.

இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர்.

1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).

இந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான்.

1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம்.

நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த ‘குரூப்’ நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன.

ஆக, இங்கேயும் நமக்கு ‘ஆப்பு’ வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி.

இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை ‘ரீ-புராஸஸ்’ செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது.

மேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன ‘டிசைனை’ மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா.

அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது.

அதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது.

ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது.

இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார்.

இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார்.

ஆனால்….

1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்..

மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே ‘லைவ்’ ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள்.

அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.

நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை.

பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.

இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம்.

அப்துல் கலாமுக்குள் இருந்த ‘அணு விஞ்ஞானி’ குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த ‘ராக்கெட்-சேட்டிலைட்’ விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை ‘கால்குலேட்’ செய்து கொண்டிருந்தார்….

போக்ரான்…

அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம்.

‘கலோனல் பிருத்விராஜ்’… என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது ‘ஸ்கெட்களில்’ ஆழ்ந்திருக்கிறார்.

மீண்டும் ‘கலோனல் பிருத்விராஜ்’ என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ”ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்” என்கிறார் சிதம்பரத்திடம்.

அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், ‘கலோனல் சீனிவாசன்’ ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக ‘மாமாஜி’ என பெயர் சூட்டினர்.

பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு ‘சக்தி’ என பெயர் சூட்டினர்.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த ‘கலோனல்கள்’ போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.

கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.

மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.

சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான்.

அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு ‘டைம் டேபிள்’ போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்..

அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.

கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், ‘நாங்க ரெடி’..

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்…!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் ‘தெர்மோ-நியூக்ளியார்’ பாம்.

இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ”இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி”.

இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை ‘அணு’ உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.

(அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் ‘சண்டை’ போட வேண்டி வரும்)

இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா!

ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை.

இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம்.

அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது.

தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை.

இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் ‘strategic planners’-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா.

இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் ‘சடசட’ மாற்றங்கள்.

இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது.

இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய ‘மாராதான்’ பேச்சுவார்த்தைகள் தான்.

இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.

ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை ‘ஜாகிங்’ செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து ‘சுவர்களை’ படிப்படியாக இடித்தனர்.

இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது.

அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான்.

Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா.

NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது.

ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.

அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா.

இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் ‘மார்க்கெட் எகானமி’ மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங்.

சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத ‘சோகக் கதையை’ மறந்துவிட்டுப் பார்த்தால்).

சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம்.

ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான்.

‘ரெட் டேப்’ சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை ‘மீட்டு’ (இடதுசாரிகள் ‘மாட்டி’ விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான்.

இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்…

இனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார்.

இந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு ‘நல்ல நாளில்’ இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் மீதான தடைகளும் நீங்கின).

இந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான்.

இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான் High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய ‘டிஸ்கசன் அஜெண்டாவே’ அணு சக்தி தொழில்நுட்பம் தான்.

இந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது ‘Man Firday’வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார்.

இந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங்.

இந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான். மாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல்.

அப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு ‘பி.பி’ எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங்.

ஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்!) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சரான புதிது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார்.

மாண்டேக் தலைமையிலான குழுவினர் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர்.

இந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன். அப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை.

இந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள்.

இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர்.

நமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம்.

மிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர்.

இது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு. இது civil nuclear deal தான். இந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை.

இதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார்.

இந்தச் சந்திப்பு மிக ‘இன்பார்மலாக’ நடத்தப்பட்டது. காரணம், ”அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா” என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே…. இதனால் எல்லா வேலையையும் ‘நல்லபடியாக’ முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது மத்திய அரசு.

ஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே ‘நெஞ்சு வலியையும்’ தந்துவிட்டது.

இன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது.

இப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங்.

புஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.

ஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது ‘123’ சட்டத்தின்படி.

இது என்னாது?.

எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது தான் ‘123 Agreement’.

ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ்.

இதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது.

இந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும்.

இந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும்.

மேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம்.

(இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது)

இடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும்.

மேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை.

அதே போல இந்தியா நினைத்தால், ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம்.

எல்லாமே நல்லா தானே இருக்கு… அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு ‘காய்ச்சல்’ வந்தது?

காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது ‘ஹைட் ஆக்ட்’..

இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்…

இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act).

Henry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும்.

உதாரணத்துக்கு ஒன்று: அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு ‘பார்ட்டி’ ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். அமெரிக்காவுக்கு அவ்வளவு இடம் தருகிறது இந்த சட்டம்.

மேலும் அமெரிக்காவும் சர்வதேச சமுதாயமும் (!) எடுக்கும் அணு ஆயத பரவல் தடை முயற்சிகளுக்கு இந்தியா ஒழுங்காக ஒத்துழைப்பு தருகிறதா?, அந்த முயற்சிகளில் முழுமையாக பங்கேற்கிறதா? என்பது குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் அந் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு ஒரு அறிக்கை தர வேண்டும்.

இதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும்.

மேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம்.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும்.

அப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட்.

இது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை. ஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட்.

இதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட்.

இதெல்லாம் அணு ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள்.

இதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள்.

மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழுத்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும்.

IAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான ‘பரம ரகசியம்’.. இதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர்.

ஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும்.

அதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள்.

மேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன. இதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம்.

ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது? என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல.

மேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது.

இதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே முடியாது.

ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு.

ஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள்.

இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்?..

காரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி..

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து.

(இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்.. மிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை என்கின்றனர்.)

Hyde Act-டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.

நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது.

நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்… கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் ‘Dual use’. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை.

நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை.

யுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான்.

இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம்.

மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது.

தோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம்.

ஆனால், அதுவரை… யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.

மேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும்.

அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile).

சரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது.

இரண்டாவது ‘பிஸினஸ்’. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ‘டபுள் டிஜிட்’ பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி… நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன.

பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம்.

நான் முதல் கட்டுரையில் சொன்னது தான்… இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்).

அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான்.

அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள்.

அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது.

கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது.

இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான்.

ஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம்.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை.

அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர்.

அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள்.

ஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது…

இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது…. என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர்.

இப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் ‘உள்’ வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்…

இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்…

அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது!

எனக்கு மின் அஞ்சலில் வந்த சற்றே பெரிய தகவல்களை பதிந்துள்ளேன்…உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்

Entry filed under: செய்தி, தகவல்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா சிவில் சட்ட திருத்தம் தேவையா?

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Thiyagarajan  |  3:11 பிப இல் ஜூலை 29, 2008

    Wonderfull article. Good one

    மறுமொழி
  • 2. raman - Vi5  |  3:46 பிப இல் ஜூலை 29, 2008

    அப்பாடா, கடைசியில் ஒரு தெளிவான ஒரு கருத்துகள் கொண்ட ஒரு கட்டுரையை படித்தில் மிகவும் மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி… மிக்க நன்றி..

    மறுமொழி
  • 3. தர்மா  |  6:36 பிப இல் ஜூலை 29, 2008

    @Thiyagarajan & Raman

    பின்னூட்டதிற்கு நன்றி

    மறுமொழி
  • 4. இராஜராஜன்  |  6:17 முப இல் ஜூலை 30, 2008

    Really its a wonderful article

    keep it up darma

    மறுமொழி
  • 5. Gunasekar  |  1:15 பிப இல் ஜூலை 30, 2008

    Really its a very usefull article to all of us … Dear Mr. Dharma thanks for ur article …

    மறுமொழி
  • 6. தர்மா  |  3:53 முப இல் ஜூலை 31, 2008

    @இராஜராஜன் & குணசேகர்

    thanks for your comments on the article..you can also feel free to express your opinion about this nuclear deal.

    மறுமொழி
  • 7. sharevivek  |  7:15 முப இல் ஓகஸ்ட் 20, 2008

    really an excellent article. after a long time i read this one

    மறுமொழி
  • 8. Anonymous  |  4:29 முப இல் செப்ரெம்பர் 11, 2008

    Fantastic Dharma. Thanks for the article. You have encapsulated all the details.

    Regards
    Venkat

    மறுமொழி
  • 9. ilamaran  |  12:15 பிப இல் நவம்பர் 6, 2009

    useful article

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நாட்காட்டி

ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Most Recent Posts


%d bloggers like this: