Posts filed under ‘கவிதை’

வரம் கேட்கிறேன்

வரம் கேட்கிறேன்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி!
வில்லங்கம் எதுவுமில்லா
காணி நிலம்
அதில்
தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை!
அடைப்பில்லாத
ட்ரைனேஜ் கனெக் ஷன்!
வைரஸ் வராத
கம்ப்யூட்டர்
விளையாடி மகிழ
வெப்சைட்
சரியான முகவரியோடு
எலெக் ஷன் கார்டு
பக்கவிளைவில்லா
பாஸ்ட் புட் அயிட்டங்கள்
மறக்காமல் கொஞ்சம்
மினரல் வாட்டர்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி
இவை யாவும் தரும் நாளில்
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்.

எம்.ஜி.கன்னியப்பன் – என் நந்தவனத்துப் பட்டாம்பூச்சிகள்

அட இப்படியும் கவிதை எழுத முடியுமா!…

பிப்ரவரி 7, 2008 at 6:30 முப பின்னூட்டமொன்றை இடுக

எனக்குப் பிடித்த கவிதைகள்

தோசைக்காரன்

அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு
ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு
ஊத்திக்கடான்னு அக்கா போட்ட
எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு
எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா.
கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார்.
தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,

ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு.
எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது
பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.

இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து
கொல்லையிலே அம்மிப் பக்கம்
மதினி சோறுகொட்டக் காத்திருக்கா.
“உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா”.

அக்கா வீட்டுக்குப் போனபோது
கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா.
“அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண?”
நாம எப்படியோ. தோசை சைவமில்லையா?
அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு.
அப்புறம் இங்கேதான் வேலை.
போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம்
ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு
குலை தெறிக்க ஓடிவந்து தருவோம்.
பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட
பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.

கார். பஸ். வெய்யில். மழை.
உசிரு.
கிடக்கு போங்க. அதுவா முக்கியம்?
இன்னும் முப்பது நிமிசத்துலே
நீங்க சாப்பிட்டாகணும்.
இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.

நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா
பஸ்காரன் கேக்கறான் – “சாவறதுக்கு வந்தியாடா?”

மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி
மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா.
யாரோட அம்மாவோ.
“தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான்”னாங்க.
எல்லோரும் சிரிக்கிற சத்தம்.
எனக்குத்தான் அழுகை.
லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு
என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.

நாள்தோறும்

பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,
பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,
காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்
தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,
சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,
பாத்திரம் ஒழித்துப் போட்டு,
பசங்களைப் படுக்கையில் விட்டு,
மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து இருட்டில்
மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்
வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,
வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள். பெய் என்றாள்.

இந்த கவிதைகளை “ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைபிரசவம்” தொகுப்பில் இருந்து எடுத்தது. இதை எழுதியது இரா.முருகன் என்னும் கவிஞர். இந்த தொகுப்பில் இதே போல் மேலும் சில நல்ல ரசிக்கத்தக்க கவிதைகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது வெளியிடுகின்றேன்.

ஒக்ரோபர் 26, 2007 at 2:34 பிப பின்னூட்டமொன்றை இடுக

எதிலோ படித்த கவிதை

மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்

-எழுதியவர் பெயர் தெரியவில்லை

செப்ரெம்பர் 28, 2007 at 4:25 பிப பின்னூட்டமொன்றை இடுக

புதுக்கவிதைகள்

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
‘பாபி’ பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)

அருமையாய் நடித்தனர்…
(என டயரியில் எழுதுகிறாராம்)

இலக்கண சுத்தததோடே
எழுதனும் கவிதை என்றார்
கையிலே வாங்கிப் பார்த்துக்
கழிநெடில் விருத்தம் என்றார்
ஒருவரி உரசிப் பார்த்தார்
கருவிளங் காய்ஈ தென்றார்
மற்றொரு வரியைச் சுட்டி
மாற்றிந்தச் சீரை என்றார்
அக்கக்காய்க் கழற்றிப் போட்டார்
அருந்தமிழ்ப் பெயர்கள் சொன்னார்
கடைசியில் திருப்பிப் பார்த்தேன்
கவிதையைக் காணோம் அங்கே!

செப்ரெம்பர் 12, 2007 at 12:05 முப 3 பின்னூட்டங்கள்

முதன்முதலாய் அம்மாவுக்கு

கவிப்பேரரசு வைரமுத்துவை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். அவருடைய கவிதைத் தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்று….

முதன்முதலாய் அம்மாவுக்கு

ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?

பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா?

இந்த கவிதையை பாடகர் S.P.B தன் அழகான குரலில் உருக்கமாக பாடியுள்ளார். கவிதையை வாசித்து முடித்த கையோடு இந்த பாடலைக் கேளுங்கள். கவிதையின் மேன்மை உங்களுக்கு புரியும்.

பாடலைக் பார்க்க/கேட்க மேலே கிளிக்கவும்.

ஓகஸ்ட் 30, 2007 at 1:59 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ போட்டி

இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.

  1. திண்ணையிலிருந்து
    நிலவை ரசிப்போம்
    தொலைந்தது வீட்டுச்சாவி
  2. மழை வருவதற்குள்
    போய் பார்க்க வேண்டும்
    அவள் போட்ட கோலம்
  3. மறுமுறையும்
    இயேசு வரமாட்டார்
    எல்லார் கையிலும் சிலுவை

ஓகஸ்ட் 16, 2007 at 11:46 முப 2 பின்னூட்டங்கள்

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…)

பாம்பு கடித்தும்
வீம்பாய் இருப்பதால்
மூக்கில் ரத்தக்கரை
நாக்கில் சற்று நுரை.

பிடிவாதக் குழந்தையின்
அழுகையை நிறுத்த
முடிவாக ஒருவழி
………………………………
வேண்டாம்.

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஹைக்கு

சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்புமுன்
பூட்டினேனோ?

அமெரிக்கா அமெரிக்கா

காசு போட்டால்
மிஷினிலிருந்து
வேசி கூட வருகிறாள்.

கென்னடியைச் சுட்டுத் தீர்த்த
சன்னல் வழி எட்டிப் பார்க்க
காசு கேட்கிறார்கள்.

நியூஜெர்ஸி நண்பரின்
‘ஏஸி’ காரில்
காஸ்ட் போட்டால்
‘பாசமலர்’ பாட்டு.

இந்த கவிதைகளை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்து மின்-அஞ்சல் பரிசாக அனுப்பப்படும். உங்களுக்காக ஒரே ஒரு கவிதையை clue-ஆக தருகிறேன்.

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.

clue-சரியான தமிழ் பதம் என்ன?

ஓகஸ்ட் 8, 2007 at 11:37 பிப 5 பின்னூட்டங்கள்

கவிதை!

நண்பர் நிலாரசிகன் எனது திருமண பரிசாக அவருடைய கவிதைத் தொகுப்பு ஒன்றை பரிசளித்தார். அவர் எனது கல்லூரி வகுப்புத் தோழர். அவர் கவிதை எழுதுவது மட்டுமல்ல, நன்றாக மிமிக்ரியும் செய்வார். எனக்கு தமிழ் கவிஞர்களை, கவிதைகளை அறிமுகம் செய்தது அவர் தான்.

அவருடைய கவிதைத்தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்றை தருகிறேன்.

அப்பாவுக்கு….

தினமும் காலை
தாமதமாக எழுகையில்
திட்டும் அம்மாவிடம்
“எம்பொண்ணு ராஜகுமாரி
அவள திட்டாதே”
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்…

உயிர் வாங்கும் பரிட்சை
நாட்களில் புத்தகம் நடுவில்
முகம் புதைத்து நான்
தூங்கிப்போனால்
“எழுந்திரிடா செல்லம்
கட்டில்ல படுத்து தூங்குடா”
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்…

கதவிடுக்கில் விரல்
சிக்கி காயத்துடன் நான்
சாப்பிட தவித்த நேரம்
சோற்றைப் பிசைந்து
பாசம் ஊட்டி
“நல்லா சாப்பிடுடா” என்று
இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்…

இவை எதுவுமே சொல்ல
முடியாவிட்டாலும்
நீங்கள் சுறுசுறுப்பாய்
ஓடுகின்ற
இந்த திருமண கூட்டத்தில்
மேடையில் அமர்ந்திருக்கும்
என் விழிகளை தொட்டுச்
செல்லும் உங்கள் பாசப்பார்வை
சொல்கிறதப்பா
“நல்லா இரும்மா” என்று.

ஜூன் 28, 2007 at 1:41 பிப 1 மறுமொழி


நாட்காட்டி

மார்ச் 2023
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Posts by Month

Posts by Category