Posts filed under ‘வாழ்க்கை’

காதலிப்பது எப்படி?


சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.

பசங்களுக்கு:

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.

இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது…சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி … தானா வரும்.

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.

நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) “நான் உன்னை காதலிக்கின்றேன்” அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.

கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..

Pls go to step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன 😉

பெண்களுக்கு:

பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.

Happy Valentines’s Day மக்கா! இந்த வருஷம் இல்லனா, அடுத்த வருஷமாச்சும், உங்க valentine கூட கொண்டாட வாழ்த்துக்கள்.

-வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பிப்ரவரி 13, 2008 at 2:47 முப 4 பின்னூட்டங்கள்

இசை கேட்டு வாழ்வோம்

இசையின் இனிமையில் மயங்காதவர் யாருளர்? இசையில்லாத இவ்வுலகில் யாராவது வாழமுடியுமா? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.

மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது Charles Darwin-னின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.

தாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக்காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. German மொழியில் Johannes Brahms என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை Bertha Faber என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் lullaby என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக Mockingbird என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.

“Hush little baby, don’t say a word Momma’s going to buy you a mockingbird”

என்று ஆரம்பமாகி முகம் பார்க்கும் கண்ணாடி, குதிரையும் வண்டியும், வேறும் பல விலையுயர்ந்த பொருள்கள் என பல தருவதாக இந்த ஆங்கிலத் தாலாட்டு உறுதி கூறுகிறது.

ஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு அதாவது pattern கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு அதாவது prognostic function ஆகியவற்றை அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஓசைச் சிறப்பால் ஏற்படுகிறது.

மரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புகின்றனர்.

தமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.

தாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.

தாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ இசை வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.

இசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளில் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைகளும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.
Washington பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. Classical இசையைக் கேட்ட மக்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.

இசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம், (blood pressure) இதயத்துடிப்பு (heart rate) சுவாசிப்பு, (breathing) மூளை அலைகள், (brain waves) மற்றும் immune response ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங்களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் (Brisbane Royal Children’s Hospital) 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த Jane Edwards இவ்வாறு கூறுகிறார்- இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
மூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான Oliver Sacks பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் (Alzheimer) உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.

பூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.

1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று Mozart’s Piano Sonata K448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் spatial IQ குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் preschoolers எட்டு மாதங்கள் keyboard படித்த போது அவர்களது spatial IQ 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The Secret Power of Music என்ற தனது நூலில் David Tame என்பவர் classical இசையை இடைவிடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் Led Zeppelin, Jimi Hendrix ஆகிய இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.

இசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நான்கு வழிகள் கூறப்படுகிறது.
1. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.
2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.
3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.
4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது அதாவது out of tune இல் மிகப் பலமாகக் கத்திப் பாடவேண்டும்.

பாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி: திண்ணை.காம்

ஓகஸ்ட் 25, 2007 at 6:33 முப பின்னூட்டமொன்றை இடுக

உறவுகள் மேம்பட…

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:

  1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை(EGO) விடுங்கள்.
  2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்(LOOSE TALKS).
  3. எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள்(DIPLOMACY), விட்டுக்கொடுங்கள்(COMPROMISE).
  4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்(TOLERENCE).
  5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
  6. உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம்
    தளர்த்திக்கொள்ளுங்கள்(FLEXIBILITY).
  7. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(COURTESY).
  8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
  9. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன்வாருங்கள்.

ஓகஸ்ட் 11, 2007 at 4:42 பிப பின்னூட்டமொன்றை இடுக

மீண்டும் பத்து கட்டளைகள்…..

என்ன கொடுமை தர்மா இது என்று நீங்கள் புலம்ப வேண்டாம். நான் பஞ்ச் பாலாவும் அல்ல கருத்து கந்தசாமியும் அல்ல. தமிழ் கூறும் நல்வுலகுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது, சொல்லிவிட்டேன்.

உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை கடைபிடிப்பது. திருவள்ளுவர் காலத்திலிருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரை தான் இளைஞர்கள். அதன் பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்து விடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு
பாலருக்கும் பொது(ஆண்-பெண்). இனி…

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா(குமுதம் 1983).

ஜூலை 19, 2007 at 12:36 பிப பின்னூட்டமொன்றை இடுக

மேலும் சில மணவாழ்வு விதிகள்

1. இருவரும் ஒரெ சமயத்தில் கோபப்ப்டாதீர்கள்.
2. வீடு பற்றிக்கொண்டால் தவிர கூச்சல் போடாதீர்கள்.
3. வாக்குவாதத்தில் இருவரில் யாராவது வெற்றி பெற்றே ஆகவேண்டுமென்றால், அது மற்றவராக இருக்கட்டும்.
4. அன்போடு விமரிசிக்கவும்.
5. கடந்த காலத் தப்புக்களை சொல்லிக் காட்டாதீர்கள்.
6. உலகத்தை நிராகரித்தாலும் ஒருவரை ஒருவர் நிராகரிக்காதீர்கள்.
7. தூங்கப்போகுமுன் சண்டை போட்டு முடித்துவிடுவது உத்தமம், மெகா சீரியல் ரேஞ்ச்சுக்கு இழுக்க வேண்டாம்.
8. தினம் ஒரு முறை பரஸ்பரம் பாராட்டுங்கள்.
9. தப்புச் செய்துவிட்டால், உடனே ஒப்புக் கொள்ளவும், மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருங்கள்.
10. சண்டைக்கு இரண்டு பேர் தேவை. இருவரில் அதிகம் பேசுபவர் பேரில்தான் தப்பு இருக்கும்.

மேலும் உங்களுக்கு எதாவது புதிய விதிகள் தெரிந்தால் உடன் மின்அஞ்சல் அனுப்பவும்.

ஜூன் 22, 2007 at 4:30 பிப 1 மறுமொழி

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு பத்து விதிகள்

1. கணவனோ மனைவியோ மற்றவரின் நண்பர்களையோ உறவினர்களையோ கிண்டல் செய்யாமலிருப்பது.
2. கணவன் மனைவியின் உறவினர்கள் பெயர்களைக் கூடிய மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வது.
3. கணவன் மனைவியை மற்றவர் முன்னால் கிண்டல் செய்யாமல் இருப்பது.
4. எப்பவும் ஆண்களே இப்படிதான் என்று மனைவியும், பெண்களே இப்படிதான் என்று கணவனும் பொதுப்படுத்தாமல் இருப்பது.
5. கணவன் எதையாவது முக்கியமானதைப் படித்துக் காட்டும்போது மனைவி பராக்கு பார்ப்பதோ, அடிக்கடி மணி பார்ப்பதோ, நடுநடுவே கொசு அடிப்பதையோ தவிர்ப்பது.
6. வீட்டில் நெருப்புப் பெட்டி, காபிப் பொடி, பனியன் போன்ற சில அத்தியாவசியப் பொருள்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று கணவன் தெரிந்து கொள்வது.
7. மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கணவன் கவனமின்றி தலையாட்டி விட்டு பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருப்பது.
8. கணவன் மனைவியை கண்ணே, கன்னுக்குட்டி, குட்டிநாயி, என்றும் ‘டா’ போட்டும் கூப்பிடுவதை முதல் வருஷத்துடன் நிறுத்தி விட்டால் அவன் சுயநிலைக்கு வந்து விட்டான் என்று மனைவி புரிந்து கொள்வது.
9. கணவன் இளவயசுகாரர்களுடன் கிரிக்கெட், ஓட்டப்ப்ந்தயம், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் மனைவி முன்னால் ஆடாமல் இருப்பது.
10. கணவன் மனைவியின் ‘டிரஸ்ஸிங் டேபிள்’ என்னும் புனிதப் பிரதேசத்தின் பக்கமே போகாமல் இருப்பது.

ஜூன் 20, 2007 at 2:51 பிப 1 மறுமொழி


நாட்காட்டி

மார்ச் 2023
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Posts by Month

Posts by Category