குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மே 3, 2008 at 5:11 பிப பின்னூட்டமொன்றை இடுக

கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்’ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் ‘ஏம்மா…எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க…நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே’ன்னு கேட்டதுக்கு, ‘கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்’னு சொன்னாங்களாம்.

உலகில் நான்குவிதமான பக்தர்கள் இருப்பதாக கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார் – ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று அவர்களைப் பற்றி சொல்வார். ஆர்த்தி என்பவர்கள் தங்கள் குறைகளைக் கூறி துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று வணங்குபவர்கள். அர்த்தார்த்தி என்பவர்கள் பொருளை விரும்பி வேண்டி வணங்குபவர்கள். ஜிக்ஞாஸு என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி வணங்குபவர்கள். ஞானி என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு உண்மை நிலையில் உருவமான இறைவனை வணங்குபவர்கள். தற்போது நம் கண்களுக்குத் தெரியும் பக்தர்களில் முதலில் சொல்லியிருக்கும் இரண்டுவிதமான பக்தர்களையே அதிகம் காண்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும் போது ‘குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ என்ற பாடலைக் கேட்கும் போது வித்தியாசமாக இல்லை?

இந்தப் பாட்டுல ‘நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல’ அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.

அறை எண் 305 கடவுள்-ஹரிணி-குறை ஒன்றும் இல்லை
கத்ரி கோபால்நாத்:
http://www.musicindiaonline.com/p/x/VJO02eAp3t.As1NMvHdW/
மாலா சந்திரசேகர்:
http://www.musicindiaonline.com/p/x/.4K0tGu5K9.As1NMvHdW/
M S சுப்புலஷ்மி:
http://www.musicindiaonline.com/p/xx/vJf2B5P_2S.As1NMvHdW/

பாடல்: இராஜாஜி

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா –
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா.

விளக்கம்:
வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா…எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா…அதனால் என்ன…நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு…அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர…வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா…நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா…திருமலையில் நிற்கும் என் அப்பா…என்னைக் காப்பவனே கோவிந்தா…

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா…உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்…என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா…நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்…அது போதும் எனக்கு…நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது… அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்… அழகிய சுருள்முடியை உடைய கேஸவா… மலையப்பா…நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை…உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது…நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்…ஆனால் அன்னையோ அப்படி அல்ல…அவள் கருணைக்கடல்…என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்…அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா… மணிவண்ணா… மலையப்பா… கோவிந்தா…கோவிந்தா….

Entry filed under: பக்தி, பாடல், புதிது.

சுஜாதா-கேள்வி பதில் Buddha has finally smiled

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நாட்காட்டி

மே 2008
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts


%d bloggers like this: