ஹேக்கிங் ஊடுருவல் சாதனங்கள் விற்பனைக்கு
ஒக்ரோபர் 24, 2007 at 1:33 பிப பின்னூட்டமொன்றை இடுக
கணினி தொழில்நுட்பம் தொடங்கிய நாள் முதலே இந்த ஹேக்கிங் என்ற சைபர் குற்றங்களும் தொடங்கிவிட்டன. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு விதமாக கணினித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்போது அதன் கூடவே ஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்களும் அதற்கு சமமாக வளர்ந்து நிற்கிறது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி இதனைத் தடுக்க என்னதான் கணினி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்தாலும் அத்தகைய சாதனங்களின், மென்பொருட்களின் சக்தியையும் கடந்து இன்று ஹேக்கிங் மகா பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது.
இந்த “வளர்ச்சி”யின் தொடர்ச்சியாக தற்போது ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் விற்பனைக்கு வேறு வந்துள்ளதாம்!
அதாவது “வளர்ந்து வரும்” ஹேக்கர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று செக்யூர் கம்ப்யூட்டிங் கார்ப்பரேஷன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது தனிப்பட்ட வைரஸ்கள் முதல் மேலும் எளிதான பல தொழில்நுட்பங்களை விற்பனைக்கு விட்டுள்ளதாம் சில ஹேக்கிங் கும்பல்கள்.
இந்த ஹேக்கிங் சாதனங்களை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்கேயுரிய பாணியில் கணினித் தாக்குதல்களை செய்யமுடியும்.
தற்போது மட்டும் இதுபோன்ற ஆன்லைன் ஹேக்கிங் கருவிகள் மட்டும் 68,000 உள்ளதாக செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செக்யூர் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் பெஞ்சமின் லோ கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாய் உள்ளது.
“சைபர் குற்றங்கள்” அதிவேகமாக அதிர்ச்சியூட்டும் வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த ஒரு உயர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு அரணையும் தகர்த்து நெட்வொர்க்குகளை நாசம் செய்ய புதிய மற்றும் நுட்பமான ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனை சாதித்த பிறகு அவர்கள் அடுத்தபடியாக அதனை விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு அந்த துறை வர்த்தக அளவில் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது” என்று எச்சரிக்கிறார்.
இந்த ஹேக்கிங் சாதனங்கள் பெரும்பாலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை செயல்படுத்துவதற்கு திறமை அவசியம். ஹேக்கர்கள் தற்போது எம்பேக் (Mpack), ஷார்க்2, நியூக்ளியர், வெப் அட்டாக்கர் (Webattacker) மற்றும் ஐஸ்பேக் (Icepack) ஆகிய ஹேக்கிங் கருவிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றை பயன்படுத்தி எந்த ஒருவரும் எளிதாக ஹேக்கிங்கில் ஈடுபடலாம். இதனால் சைபர் கிரைம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் அதனுள் நுழைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது முதல் தர ஹேக்கிங் கருவிகள் 1000 டாலர்களுக்கு கிடைப்பதோடு, 12 மாத தொழில்நுட்ப உதவி வேறு இதில் கிடைக்கிறதாம்.
இந்த ஹேக்கிங் கருவிகள் விற்பனையில் அவர்களுக்கு எந்த வித இடர்பாடும் இல்லை. அதாவது இந்த கருவிகளை பயன்படுத்தி ஹேக்கிங் செய்தாலும், இதனை வடிவமைத்த, விற்பனை செய்த நபர்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இக்கருவிகள் “இந்த மென்பொருள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே” என்ற பெயரில் உள்ளது.
எனவே ஹேக்கர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த விற்பனையிலும் அவர்கள் கொடிகட்டி பறக்க துணிந்து விட்டார்கள். என்ன செய்யப்போகிறது கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Entry filed under: தகவல்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed